werewolf syndrome என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபனின் புகைப்படம்தான் சமூக வலைதளங்களில் படு வைரலாகியிருக்கிறது.
நோயின் பேருக்கு ஏற்றார் போல, அந்த வாலிபனின் முகம் உட்பட உடல் முழுவதும் முடிகளால் சுழப்பட்டிருக்கிறது. லலித் பதிடர் என்ற 17 வயது இளைஞனான அவர் மத்திய பிரதேசத்தின் நந்த்லேட்டா கிராமத்தைச் சேர்ந்தவராவார். லலித்தின் ஆறாவது வயதில் கண்டறியப்பட்ட இந்த அறியவகை நோய்க்கு மருத்துவத்தில் hypertrichosis என அழைக்கப்படுகிறது.
hypertrichosis என்பது உடலின் பாகங்களில் அதிகளவில் முடி வளர்வதை குறிக்கிறது என அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தின் தரவுகள் மூலம் அறியப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறப்பிலிருந்து அல்லது வளர்ந்த பின்னரும் அதன் தாக்கம் வெளிப்படுமாம். இந்த அரியவகை நோய் உலகின் 50 பேருக்கு மட்டுமே இருப்பதாகவும், அதுவும் நடுத்தர வயதினரே இதனால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தனக்கு இருக்கும் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் குறித்து பேசியுள்ள லலித், “பள்ளியில் சக மாணவர்கள் என்னை பார்த்து குரங்கு பையன் என்றுதான் அழைக்கிறார்கள்.” என இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், என் உடலில் வளரும் முடியை ஷேவ் செய்தாலும் உடனே வளர்ந்து விடுவதாகவும் லலித் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அந்த வாலிபன், “நான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை ஒரு விவசாயி. நான் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தைக்கு அவ்வப்போது விவசாயத்தில் உதவி செய்வேன்.
ஆறு அல்லது ஏழு வயது வரை என்னிடம் எந்த வித்தியாசத்தையும் நான் கண்டதில்லை. அதன் பிறகுதான் என் உடலில் முடி வளர்வதை உணர்ந்தேன். வேறு ஏதோ உயிரினம் என எண்ணி சிலர் என் மீது கல்லை கொண்டு எறிவார்கள். இதனை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை என்பதால் இதனூடே வாழ பழகிக்கொண்டேன்.” என தெரிவித்திருக்கிறார்.
ஆனால், காஸ்மெட்டிக் சர்ஜரி முறை இந்த நோய்க்கான சிகிச்சையாக இருந்தாலும், லேசர் சிகிச்சை, டிபிலேட்டரி கிரீம்கள் மற்றும் மின்னாற்பகுப்பு ஆகியவை பொதுவாக உடலில் தேவையற்ற முடிகளை அகற்ற பயன்படும் சிகிச்சையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM