இந்திய ஊழியர்களை வெறுமனே பணிநீக்கம் செய்யாமல் பல்வேறு சலுகைகள் அடங்கிய VSP என்ற திட்டத்துடன் வெளியேற்றுகிறது அமேசான் நிறுவனம்.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை தொடர்ந்து, உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவில் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது. செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது என அமேசான் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அந்நிறுவனம் தனது பணிநீக்க நடவடிக்கையைத் துவங்கியுள்ளது.
இருப்பினும் அமேசான், இந்திய ஊழியர்களை வெறுமனே பணிநீக்கம் செய்யாமல் பல்வேறு சலுகைகள் அடங்கிய Voluntary Separation Program (VSP) என்ற திட்டத்துடன் வெளியேற்றுகிறது. இந்த திட்டத்தின்படி ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளது. VSP திட்டம் மூலம் ஊழியர்கள் நவம்பர் 30 ஆம் தேதி காலை 6.30 மணிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, பணியை ராஜினாமா செய்வதை அறிவிக்க வேண்டும். மேலும் VSP திட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு சில முக்கியச் சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது.
VSP திட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு 22 வார அடிப்படை சம்பளம் மற்றும் ஒவ்வொரு 6 மாத பணியாற்றியதற்கு ஒரு வார அடிப்படை சம்பளம் அளிக்கப்படும். மேலும் 6 மாதத்துக்கு மருத்துவக் காப்பீடு அல்லது அதற்கு இணையான தொகை வழங்கப்படும். அடுத்ததாக வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் நோட்டீஸ் காலம் அல்லது சம்பளம் அளிக்கப்படும் என அமேசான் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM