மதுராந்தகம்: ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த விடுமுறை தினம், இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப், காணொலி மூலமாக நடத்தப்படும் ஆய்வுகள் போன்றவற்றை முற்றிலும் கைவிட வேண்டும், ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கவேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர் களுக்கான ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்ய வேண்டும்.
மக்கள் நலன்களையும் நிர்வாக நலன்களையும் கருத்தில் கொண்டு பெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியங்களை உருவாக்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், முழு சுகாதார திட்ட மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்ய வேண்டும், ஈரோடு மாவட்டத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் பணிக்கு வராததால் ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது. மக்களின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. போராட்டத்துக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தனர்.