சத்தியமூர்த்தி பவன் கலாட்டா: நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்!

சென்னை: சத்தியமூர்த்தி பவன் கலாட்டா எதிரொலியாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளர்.

கடந்த 15ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலுகமான சத்திய மூர்த்தி பவனில் இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு ரத்தக் காயமும் ஏற்பட்டது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அதில் ரூபி மனோகரன் ஆஜராகவில்லை.  தொகுதியில் பல்வேறு பணிகளுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு இருந்ததன் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு கடிதம் அனுப்பி இருப்பதாகவும்,   என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்ததுடன்,  கட்சி அலுவலகத்திற்கு அடி ஆட்கள் வந்திருக்கலாம். நிச்சயமாக கட்சிக்காரர்கள் யாரும் சக கட்சி க்காரர்களை தாக்கி இருக்க மாட்டார்கள். குண்டர்கள்தான் தாக்கியிருக்கலாம் என்று கூறியதுடன்,  உட்கட்சி விவகாரம் நிச்சயமாக பேசி முடிவெடுக்கப்படும்” என்று  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஒழுங்கு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ராமசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். 63 மாவட்ட தலைவர்கள் இணைந்து ரூபி மனோகரனுக்கு எதிராக ஒரு புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். “15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷவசமானது. அப்படி நடந்திருக்க கூடாது. இனி மேல் அதுபோல் நடக்க கூடாது என்பதற்காகவே நாங்கள் கூடினோம்” என்று ஒழுங்கு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ராமசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.