செல்போனை பறித்துக் கொண்டு ஓடும் இரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்!

சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள உறவினர்களுக்கு கொடுக்க நேற்று சென்னையில் இருந்து அரக்கோணம் வரை மின்சார ரயிலில் வந்த பிறகு, அரக்கோணத்தில் இருந்து வேலூர் டவுன் ஸ்டேசனுக்கு லிங்க் இரயில் மூலம் நேற்று மாலை வேலூர் வந்து கொண்டிருக்கும் போது மகளிருக்கான பெட்டியில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் பொது பெட்டியில் ஏரிய இளைஞர் ஒருவர், மகளிருக்கான பெட்டியில் சென்னையை சேர்ந்த இளம் பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் சென்றுள்ளார். பின்னர் அந்த இளைஞர் இளம் பெண்ணிடம் இருந்து செல்போனை கேட்டுள்ளார். செல்போன் தர அப்பெண் மறுத்து தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபருக்கு வீடியோ கால் செய்துள்ளார். இதனை அறிந்த அந்த இளைஞர் பெண்ணிண் கழுத்தில் கத்தியை வைத்து செல்போனை பிடுங்கி உள்ளார. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். அச்சமயம் ரயில் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியில் மெதுவாக கடந்து சென்றுள்ளது.

ரயிலில் பெண் அலறும் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் ரயிலை நோக்கி விரைந்துள்ளனர். இதனைக் கண்ட இளைஞர் பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடி உள்ளார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பலத்த படுகாயத்துடன் இருந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரயில் நிலைய தமிழ்நாடு இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுமார் ஆறு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளனர். விசாரணையில் பல திடுகிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ரயிலில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி செல்போனை பறித்து தள்ளிவிட்டு நபர்  குடியாத்தம் அடுத்த கீழ் ஆலத்தூர் நாகல் பூஞ்சோலை பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (24) என்பதும் இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக காட்பாடியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் அக்னி பாத் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் ஹேம்ரஜ் (24) சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு திரும்பியதும், செல்லும் வழியில் பெண்ணிடம் வழிபறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

வழிபறியில் ஈடுபட்ட இளைஞரின் சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் கண்டு இன்று அவர் வீட்டில் இருக்கும் போது காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவலர்கள் கைது செய்துள்ளனர். ராணுவ ஆள் சேர்ப்பு முகாமுக்குச் சென்ற இளைஞர் ரயிலில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து அப்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த பெண் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.