விஜய், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிக்கும் வாரிசு படத்தை வம்சி இயக்கிவருகிறார். தில்ராஜு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்க படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. பைலிங்குவல் படமாக உருவாகியிருக்கும் வாரிசு படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுமென தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால் படக்குழு என்ன செய்வதென தெரியாமல் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது அதிலும் புதிய பிரச்னை எழுந்துள்ளது. பூவிருந்தவல்லி அருகே நடந்த ஷூட்டிங்கில் யானைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே மக்களிடம் நேர்காணல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை செய்தியாளர்களை தாக்கியதாக தெரிகிறது.
இப்படி இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் அனுமதியின்றி யானை கொண்டுவரப்பட்டது, செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க மேலும் புதிய பிரச்னை ஒன்று உருவாகியுள்ளது.
அனுமதியின்றி யானைகள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “விலங்குகளை பயன்படுத்தும் முன்பு விதி 31ன்படி விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். வாரியத்தின் அனுமதியின்றி பயன்படுத்துவது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 26ன் கீழ் குற்றமாகும்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 அட்டவணை-1ன் கீழ் யானைகள் பாதுகாக்கப்படும் விலங்குகள் ஆகும். மற்றும் விதி 7(2)இன்படி, திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுவது அவசியம். அதேபோல் பயன்படுத்தும் விலங்கு வகை, விலங்குகளின் வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்தும் முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும்.
எனவே அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி வாரிசு படத்துக்கு தொடர்ந்து எழும் சிக்கல்களால் படக்குழு பெரும் அப்செட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, வாரிசு படத்துடன் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியாகிறது. எனவே துணிவுக்கு அதிக திரையரங்குகள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டி விஜய்யின் வாரிசுக்கு தியேட்டர்கள் அதிகம் கிடைக்குமா என்ற கேள்வியையும் அவரது ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். அதேசமயம், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாரிசை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.