திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு ஊராட்சி அருகே நாராயணபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வடுக முத்தம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்த மாணவர்கள் திருப்பத்தூரில் இருந்து மயில் பாறை வரை செல்லும் அரசு பேருந்தில் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். அதேபோல் இன்று காலை 8 மணி அளவில் நாராயணபுரத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஏறி சென்றனர்.
இந்த பேருந்து, திருப்பத்தூர்-ஆலங்காயம் மெயின் ரோட்டில் நாராயணபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறியதால் சாலையோரத்தில் நின்ற மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் வந்த பள்ளி மாணவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அப்போது மாணவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இரண்டு மணி நேரம் ஆகியும் போலீசார் வரவில்லை. இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்தை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.