தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த யோகிபாபு தனது அசாத்தியமான நடிப்பால் முன்னணிக்கு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறக்க, சந்தானம் ஹீரோவாக மாற, சூரி, சதீஷின் காமெடி பலருக்கு போர் அடிக்க நகைச்சுவைக்கான வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பினார். தற்போது அவர் பல படங்களில் நடித்துவருகிறார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடிக்கிறார் யோகிபாபு. தொடர்ந்து காமெடியில் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த மண்டேலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றது.
காமெடி, ஹீரோ மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிவருகிறார் யோகி. சமீபத்தில் லவ் டுடே படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் யோகிபாபு நடிக்க வேண்டுமெனவும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் Urbaser Sumeet நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக குறும்படம் தயாரிக்கப்படுகிறது. அதில் யோகிபாபு தூய்மை பணியாளராக நடிக்கிறார். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டுமென்பதற்கும், சுற்றத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்துவிதமாக இந்தப் படம் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களுக்கு அவசியமான குறும்படத்தில் யோகிபாபு நடிப்பதை அடுத்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். மேலும் அந்தக் குறும்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைபப்டங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
முன்னதாக, தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார் யோகிபாபு. ஏற்கனவே ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்திருந்த யோகி தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.