மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக பெற்றோர் போலீஸில் புகார் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்- கார்த்திகா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது
குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி சரியாக இல்லாததால் சிகிச்சைக்காக அப்போதே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அப்போது நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அடுத்தாண்டு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக புகார் எழும்பியுள்ளது.
இது குறித்து குழந்தையின் தந்தை அஜீத்குமார் போலீஸில் புகார் செய்துள்ளார். புகாரில், “நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய ஆபரேஷன் தியேட்டருக்கு என் குழந்தையை கொண்டு சென்றனர். ஆபரேஷன் முடிந்து குழந்தையை கொண்டு வந்தபோது நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் ஆபரேஷன் செய்திருந்தனர். உடனே இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டோம். உடனே குழந்தையை மீண்டும் ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு சென்று நாக்கில் ஆபரேசன் செய்தனர்.
ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு டாக்டர்கள் சரியான பதிலை கூறவில்லை. என் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் டாக்டர்கள்தான் பொறுப்பு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் கொடுத்துள்ளார்.
இப்பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியவுடன், ‘எந்த தவறும் நடக்கவில்லை’ என்று மருத்துவமனை டீன் ரத்தினவேல், அறுவை சிகிச்சைத் துறைத்தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், “குழந்தை பிறந்த 4 நாள்களில் வாயில் நீர்க்கட்டியுடன் மூச்சுத்திணறல் இருந்ததால், அதை அப்போது ஆபரேசன் செய்து அகற்றினோம். ஓராண்டு கடந்து மீண்டும் ஒரு ஆபரேசன் செய்ய வேண்டுமென்பதால் செய்தோம். அப்போது குழந்தைக்கு சிறுநீரக பிரச்னை இருப்பது தெரிந்தது. பின்னாளில் இது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதே ஆபரேசனோடு பிறப்புறுப்பில் சிறிய அளவிலான ஆபரேசன் செய்யப்பட்டது. ஆபரேசன் தியேட்டாரில் இருந்ததால் இதை உடனே பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. குழந்தையின் நலனுக்காக நல்லது செய்தோம். அதை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
பொதுவாக எந்த ஒரு, சிகிச்சை, ஆபரேஷனாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் பாதுகாவலரிடம் தெரிவிப்பதுதான் மருத்துவத்துறை வழக்கமாக உள்ளது. ஆனால், அதை செய்யாத மருத்துவமனை நிர்வாகம் இப்போது சொல்லும் விளக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
சமீபத்தில் சென்னையில் விளையாட்டு வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரை அரசு மருத்துவமனை மீது எழுந்துள்ள புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு தகவல் சென்றுள்ளது. மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.