கோலாலம்பூர்: நீண்ட இழுபறிக்குப் பின்னர் மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மலேசிய மன்னர் அப்துல்லா, எதிர்க்கட்சி தலைவர் அன்வரை பிரதமராக அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் அன்வர் மலேசிய பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.
மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆளும் கட்சியை தீர்மானிப்பதில் சிக்கல் நீடித்தது.
இதனைத் தொடர்ந்து மூன்று பெரிய தேசிய கட்சிகள் சிறிய கட்சிகளின் கூட்டணியுடன் அமைக்க முயசித்தன. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பகாதான் ஹரபன் கட்சி கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் இந்தத் தகவலை மலேசிய மன்னர் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மலேசிய மன்னர் வெளியிட்ட அறிவிப்பில், “ மலாய் ஆட்சியாளர்களின் கருத்துக்களை ஏற்று, மலேசியாவின் 10 வது பிரதமராக அன்வர் இப்ராஹிமை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது” என்றூ தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.