மின்னல் வேகத்தில் புதிய தேர்தல் ஆணையர் நியமனம்: மத்தியஅரசிடம் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி…

சென்னை:  இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக அருண் கோயல் நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள், மின்னல் வேகத்தில் நியமனம் நடைபெற்றுள்ளது, எதற்கு இந்த அவசரம்  என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருந்து வருகின்றனர். இதில் ஒருவர் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்,  புதிய தேர்தல் ஆணையராக 1985ம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயலை நியமித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அவர் ஆணையராக பதவி ஏற்றார்.

ஏற்கனவே  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ள நிலையில்,  தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் பணியில் இருக்கும் நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் கடந்த 21ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே மத்தி அரசு செயலாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவருக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது. இவர்   2027ம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து அருண் கோயல் ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் சீர்திருத்தங்களை கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமை யிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.  கடந்த 18-ம் தேதி முதல் விசாரணை தொடர்ந்த வருகிறது.  வழக்‍கின் நேற்றைய விசாரணையின்போது, புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தில் இன்று ஆவணங்களை தாக்கல் செய்தது.   ந்த கோப்புகளை பார்த்த நீதிபதிகள், மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கட்ரமணியிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.   கடந்த மே மாதம் முதல் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கான அறிவிப்பு, நவம்பர் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கிய பிறகே, நவம்பர் 18ஆம் தேதி வந்துள்ளது. அதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் எனவும் நீதிபதி ஜோசப் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

புதிய தேர்தல்ஆணையர் தொடர்பான ஆவணமும் நவம்பர் 18ஆம் தேதியே அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.  அதே நாளில் நீங்கள் கோப்பை நகர்த்துகிறீர்கள்… அதே நாளில் நான் அவருடைய பெயரைப் பரிந்துரைக்கிறேன் என்று பிரதமர் கூறுகிறார்… ஏன் இந்த அவசரம்? என்று நீதிபதி ஜோசப் கேள்வி எழுப்பினார்.

பரிசீலிக்கப்பட்ட 4அதிகாரிகளில் அருண் கோயல்தான் இளையவர் என்பதை மத்திய அரசு தாக்கல் செய்த கோப்பில் இருந்து வாசித்த நீதிபதி ஜோசப், 4 அதிகாரிகளில் இருக்கும் போது, அவசர அவசரமாக மின்னல் வேகத்தில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்தியஅரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கபட்டுள்ளார்? இவ்வளவு நாட்கள் மத்திய அரசு என்ன செய்தது? என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த தேர்தல் ஆணையர் பணியிடம், கடந்த மே 15-ம் தேதி முதல் 6 மாதமாக காலியாக இருந்தபோது, மத்தியஅரசு என்ன செய்து கொண்டிருந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

ஒரே நாள் செயல்முறை, அதே நாள் அனுமதி, அதே நாள் விண்ணப்பம், அதே நாள் நியமனம் என மின்னல் வேகத்தில் இதை செய்ய காரணம் என்ன? என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, உரிய நடைமுறைகளுக்கு உட்பட்டே நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.   இதுகுறித்தான விளக்கத்தை வருகிற 29ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்‍கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.