சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனுக்கு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை ஒழுங்கு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ராமசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். 63 மாவட்ட தலைவர்கள் இணைந்து ரூபி மனோகரனுக்கு எதிராக ஒரு புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது நிரந்தர நீக்கம் இல்லை என்றும் தற்காலிக நீக்கம் என்றும் தெளிவுபடுத்தினர்.
“15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷவசமானது. அப்படி நடந்திருக்க கூடாது. இனி மேல் அதுபோல் நடக்க கூடாது என்பதற்காகவே நாங்கள் கூடினோம்” என்று ஒழுங்கு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ராமசாமி கூறினார்.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். நியாயமான கோரிக்கைக்கு எனது தொகுதி கட்சி உறுப்பினர்கள், கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றார்கள். அவர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அனைத்து கட்சிகளிலும் இதுபோன்ற பிரச்சினை நடப்பது இயல்புதான். பொதுவெளியில் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. என்ன நடந்தது என்பது தொடர்பாக தேசிய தலைவர் கார்கேவிடம் புகாராக தெரிவித்துள்ளோம்.
இன்று எனக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டி இருந்தது. தொகுதியில் பல்வேறு பணிகளுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு இருந்ததன் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளேன். என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். கட்சி அலுவலகத்திற்கு அடி ஆட்கள் வந்திருக்கலாம். நிச்சயமாக கட்சிக்காரர்கள் யாரும் சக கட்சி க்காரர்களை தாக்கி இருக்க மாட்டார்கள். குண்டர்கள்தான் தாக்கியிருக்கலாம். உட்கட்சி விவகாரம் நிச்சயமாக பேசி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.