பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் லவ் டுடே. சம கால காதலை மையப்படுத்தி எதார்த்தபோக்குடன் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. மிக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினரே எதிர்பார்க்கவில்லை. குறைந்த அளவிலான தியேட்டர்களில் மட்டுமே வெளியான லவ் டுடே படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து, நாளுக்கு நாள் தியேட்டர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.
தாறுமாறு வெற்றியை பெற்றிருக்கும் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது. கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இப்போது வரை இந்தப் படம் சுமார் 100 கோடி வசூலை பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மெதுவாக பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் ஆரம்பித்த இப்பட்டம் நாளுக்கு நாள் கிடைத்த வரவேற்பில் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸிலும் இணைந்துள்ளது. தெலுங்கு ரைட்ஸூம் அமோக தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறதாம்.
இந்தப் படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், லவ் டுடே படத்தின் முதல் பாதியை மட்டுமே பார்த்து படத்தை வாங்க ஓகே சொல்லிவிட்டதாக தெரிவித்துள்ளார். இரண்டாம் பாதியை பார்க்குமாறு தயாரிப்பாளர் வற்புறுத்தியபோதும், இல்லை இல்லை நாங்கள் வெளியிட விரும்புகிறோம் என வெளிப்படையாக கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், நல்ல படம் ஹிட்டாகும் என தெரியும், ஆனால் இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என துளியும் எதிர்பார்க்கவில்லை எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே லவ் டுடே செம ஹிட்டாகி, இந்த ஆண்டில் குறிப்பிடத்தகுந்த வசூலை பெற்ற படம் வரிசையில் இடம்பிடித்துள்ளது.