21 இடங்களில் சோதனை; ரூ.500 கோடி மோசடி?! – ஹிஜாவு நிறுவனம் மீதான புகார்கள் என்னென்ன?

மோசடி குற்றச்சாட்டு:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று பல்வேறு நிறுவனங்கள் தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் சென்னை கீழ்ப்பாக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செய்யப்படும் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

ஹிஜாவு நிறுவனம் மீதான புகார்

இந்த புகார் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியது. ஹிஜாவு நிறுவனத்தை சவுந்தரராஜன்(77), அவரின் மகன் அலெக்சாண்டர் (42) ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்துக்கு பல்வேறு கிளைகள் இருந்துள்ளது. மேலும், இவர்கள் இன்னும் சில நிறுவனங்களையும் நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

500 கோடி ரூபாய் மோசடி?:

இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 15 சதவிகிதம் அதாவது 15 ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் வட்டியாகக் கொடுக்கப்படும் என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய மக்கள், தங்கள் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். முதலில் சேர்ந்தவர்களுக்கு வட்டிப்பணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பணம் வருகிறது என்ற நம்பிக்கையில் அதிகமான மக்கள் இந்த நிறுவனத்தில் தங்களின் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.

சவுந்தரராஜன்

பொதுமக்களிடம், முதலீடும் செய்யும் பணத்தைத் துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். அதில் கிடைக்கும் அதிக லாபத்தைக் கொண்டு வட்டி பணம் கொடுக்கப்படும் என்று சொல்லி மக்களை நம்பவைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் ஆள் சேர்பவர்களுக்கு நல்ல கமிஷன் தொகை வழங்கப்பட்டதை அடுத்து, பலரும் தங்களுக்குத் தெரிந்தவர்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்திருக்கிறார்கள். சுமார் 4,500 பேர் 500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்திருக்கிறார்கள்.

21 இடங்களில் தீவிர சோதனை:

ஒரு கட்டத்தில் இந்த நிறுவனம் சொன்னதுபோல, வட்டி தொகையைத் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் இந்த விவகாரம் குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். வழக்கின் அடிப்படையில், சவுந்தரராஜன், அலெக்சாண்டர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. சவுந்தரராஜன், அலெக்சாண்டர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அதேசமயத்தில், சென்னையில் கடந்த 16-ம் தேதி மோசடி குற்றத்தில் முக்கிய குற்றவாளியான நேரு (49) என்பவரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அலெக்சாண்டர்

கைது செய்யப்பட்ட நேருவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஹிஜாவு நிறுவனத்தில் தலைமை அலுவலகம், சவுந்தரராஜன், அலெக்சாண்டர் போன்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடு உட்பட 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தின் மதிப்பு 500 கோடி ரூபாயிலிருந்து இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கபடர்வகள் [email protected] என்ற இ – மெயில் முகவரியில் புகார் வழங்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.