உலகம் முழுவதும் தற்போது தட்டம்மை நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து, உலக சுகாதார மையம், அமெரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையம் ஆகியவை இணைந்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில்,”கரோனா பெருந்தொற்று காலம் தொடங்கியதில் இருந்து தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்திகள் குறைந்து காணப்படுகிறது. ஏனென்றால், கடந்தாண்டு மட்டும் ஏறத்தாழ 40 மில்லியன் குழந்தைகள் தட்டமைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை.
இதனால், தற்போது தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பு உலகெங்கிலும் காணப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முறையாக தட்டம்மைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாததால், இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே தட்டம்மை பரவல் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை நோய் விரைவில் மற்றவர்கள் பரவக்கூடிய ஒன்று. 2021ஆம் ஆண்டில் மட்டும், 90 லட்சம் பேருக்கு தட்டம்மை பரவல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதில் 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் தட்டம்மை பாதிப்பு அதிகமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாதது, தாமதமாக தட்டம்மை நோய் பாதிப்பை தடுக்க திட்டமிட்டது, கரோனா அழுத்தத்தால் தட்டம்மை கண்காணிப்பில் சுணக்கம் காட்டியது உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்கள் தட்டம்மை பரவலை முன்னிட்டு முன்வைக்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்தியாவிலும் தட்டம்மை பாதிப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மும்பையில் தற்போது 13 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அங்கு தட்டம்மையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையில் மட்டும் இந்தாண்டு 12 பேர் தட்டம்மையால் உயிரிழந்துள்ளனர், 233 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, 30 பேர் பிரிஹன்மும்பை பகுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 22 பேர் நேற்று வீடு திரும்பினர். அதே பகுதியில் நேற்று மட்டும் 156 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தட்டம்மை நோய் அதிக குழந்தைகளை தான் பாதிக்கும். கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 3.04 லட்சம் வீடுகளில் மும்பை பெருநகர மாநகராட்சி, நோய் பாதிப்பு குறித்து ஆய்வுக்குடுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் அறிப்பு உள்ளவர்களுக்கு விட்டமிண் ‘ஏ’, 24 மணிநேர இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
தட்டம்மை என்பது மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ்களில் ஒன்றாகும், இதை தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கக்கூடியது. இவை விலங்குகள் மூலம் பரவாது. இருப்பினும், சமூகப் பரவலைத் தடுக்க 95 சதவீத தடுப்பூசி பாதுகாப்பு தேவைப்படுகிறது.
95 சதவீதத்திற்கும் அதிகமான தட்டம்மை இறப்புகள் வளரும் நாடுகளில்தான் நிகழ்கின்றன. பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில். தட்டம்மைக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் அதற்கு எதிரான இரண்டு டோஸ் தடுப்பூசி கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுப்பதில் சுமார் 97 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஜூலை மாதம், ஐ.நா., 25 மில்லியன் குழந்தைகள் டிப்தீரியா உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான வழக்கமான தடுப்பூசிகளை தவறவிட்டதாகக் கூறியது, பெரும்பாலும் கொரோனா வைரஸ் வழக்கமான சுகாதார சேவைகளை பெரிதும் பாதித்தது என்று கூறப்படுகிறது.