தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே அதிகார மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சட்டசபையில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு காலம் தாழ்த்தி அனுமதி வழங்கியும், சில மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்துக்கு கையெழுத்திடாமல் அதனை காலாவதியாகியுள்ள பழிக்கு ஆர்.என்.ரவி ஆளாகியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் தமிழகத்தில் குடும்ப பெண் உட்பட 82 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடன் வாங்கிய பணத்தையும், கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தையும் சூதாட்டத்தில் வைத்து தோற்பவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தை ஆராய்ந்து உரிய நேரத்தில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலாவதியாகிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டி சுகுணா பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, தெலுங்கானாவில் எந்த முரண்பாடும் இல்லை. அரசாங்கம்தான் முரண்பாடாக இருக்கிறது. ஆளுநரிடம் முரண்பாடு இல்லை
என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றை தாமதப்படுத்த வேண்டும் என்று இல்லை. சில விபரங்களை கேட்டு இருக்கின்றோம்.
தெலுங்கானாவில் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாவில் விபரங்களுக்காக நிறுத்தி வைத்து இருக்கின்றொம். அதில் சில மாற்றங்களுடன் கொண்டு வருகின்றனர். இது மக்களுக்கு பலன் கொடுக்கின்றதா என்பதை பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும்.
இவற்றை தாமதம் என்று எடுத்துகொள்வதை விட, கால அவகாசம் என எடுத்து கொள்ள வேண்டும். அரசியல் காரணத்திற்காக தெலுங்கானாவில் எனக்கு கவர்னர் உரை மறுக்கப்பட்ட போதும் பட்ஜெட் தாக்கலுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை.
மக்கள் நலனை அடிப்படையாக வைத்து நான் இயங்கி வருகின்றேன். ஆனால், என்னை புரிந்து கொள்ளாமல் சிலர் இங்கே விமர்சிக்கின்றனர். மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். ஆளுநர்களை சந்திப்பதால் பல பிரச்சினைகள் தீர்ந்து இருக்கின்றது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு அனுமதி கொடுக்காதற்கு அரசியல் காரணமா என்பதை ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும். இந்த சட்டத்தில் என்ன குறைபாடுகளை பார்த்தார் என்பதை அவரிடம் கேட்டால் தெரியும்
தமிழக ஆளுநர் ஒருமதத்தை சார்ந்து பேசுகின்றாரா என தெரியவில்லை. மதசார்பற்ற தன்மையை தமிழக முதல்வர் கடைபிடிக்க வேண்டும்.
முதல்வர் வாழ்த்து சொல்வதில் பாரபட்சம் காட்ட கூடாது. இதற்கு பதில் கிடைப்பதே இல்லை. ஆளுநர்கள், இணை அரசாங்கம் நடத்த பார்க்கவில்லை. துணை அரசாங்கம் நடத்தவே விரும்புகின்றோம். ஆளுநர் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர் என தமிழிசை கூறினார்.