கடந்த 2017-ம் ஆண்டு சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அவரின் பேச்சு இருந்ததால், அவர்மீது அஸ்தம்பட்டி காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருந்தனர். இந்த வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு முடியும் நிலையில் இருப்பதால், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான், “தமிழகம் தற்போது போதை தலைவிரித்தாடும் தலைநகரமாக மாறிவருகிறது. எங்குப்பார்த்தாலும் போதைப்பொருள்களின் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது.
இதனை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, தடுக்கும் வழிமுறைகளை ஏற்படுத்தவேண்டும். மேலும் பா.ஜ.க அரசு தமிழகத்தில் தாங்கள் நினைத்ததெல்லாம் செய்துவிடலாம் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் தமிழகத்தில் நாங்கள் இருக்கும்வரை நடக்காது. இந்தியாவில் மொத்த தீவிரவாதிகளும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸில்தான் இருக்கின்றனர். இவர்கள் எப்படி இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கமுடியும்.
தற்போது அந்தக் கட்சிக்குள்ளேயே (பா.ஜ.க) பெண் நிர்வாகிகளை இழிவுப்படுத்தி பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்னை போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது. ஆகையால் அண்ணாமலை இதனை சரியாக கையாள வேண்டும். தமிழகத்தில் ஒரு வேளை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வந்தால் நாடே தலைகீழாக மாறிவிடும், தமிழ்நாட்டை சிங்கப்பூர் போல மாற்றிடுவார்” என்றார்.