சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கைகள் மீண்டும் திமுகவில் எழ தொடங்கி உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 2021 மே 7 தேதி பதவி ஏற்றது. 18 மாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை ஒருமுறை மட்டுமே இலக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அவருக்கு வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கருக்கு போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் 46 வது பிறந்தநாளை நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர் திமுகவினர். திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அடுத்த பிறந்தநாளில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
அதேபோல மூத்த அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மற்றும் நேரு ஆகியோரும் உதயநிதி அமைச்சராக தகுதி உடையவர் என நேற்று பேட்டி கொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.
-எம்.ரமேஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM