இன்னும் இரண்டு நாட்கள் தான். குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. அடுத்தகட்டமாக 5ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை 8ஆம் தேதி என பரபரப்பாக தேர்தல் களம் நகரவுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 89 தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
பாஜகவிற்கு அதிர்ச்சி
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் பாஜகவை பொறுத்தவரை காங்கிரஸ் உடன் இருமுனைப் போட்டியாகவே கருதி களம் காண்கிறது. இந்த சூழலில் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் முடிவுகள் வெளியாகும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
சூரத்தில் ஆம் ஆத்மி கொடி
சூரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். இதோ நான் எழுதி விட்டேன் என்று பொதுமக்களிடம் காட்டி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் புதிதாக ஒரு தகவலை வெளியிட்டு தேர்தல் களத்தை அனல்பறக்க செய்துள்ளார். சூரத் மாவட்டத்தில் 7 முதல் 8 தொகுதிகளில் ஆம் ஆத்மி நிச்சயம் வெல்லும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அடித்து சொல்கிறார்.
வெற்றிகளை குவிக்க வியூகம்
இங்கு மொத்தம் 16 தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கடர்காம் தொகுதியில் போட்டியிடும் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் கோபால் இடாலியா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மேலும் கம்பாலியா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் கத்வி, வராச்சா ரோடு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் படேல் சமூகத் தலைவர் அல்பேஷ் கதிரியா ஆகியோரும் வெற்றி பெறுவர் என்று கூறினார்.
ஆம் ஆத்மி வாக்குறுதிகள்
மேலும் பேசுகையில், வர்த்தகர்கள் அச்சமின்றி வியாபாரம் செய்யலாம். அடுத்த தலைமுறை வளமிக்கதாக இருக்கும். எனவே குஜராத் மாநில இளைஞர்களும், பெண்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும். தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளப்படும். இலவச மற்றும் தரமான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
உற்சாகத்தில் தொண்டர்கள்
அரசு வேலைகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வேலையில்லாத நபர்களுக்கு வேலை கிடைக்கும் வரை 3,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். குஜராத்தில் பாஜகவிற்கும், ஆம் ஆத்மிக்கும் இடையில் போட்டி நிலவுகிரது என நினைத்து விடாதீர்கள். நாங்கள் அவர்களை விட ஒருபடி மேலே இருக்கிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.