கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி முதுதலையைச் சேர்ந்தவர் துர்கா மாலதி. ஆசிரியராகவும், ஓவியராகவும் இருக்கும் துர்கா மாலதி தன்னுடைய வீட்டில் `நக்கு’ என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். அந்த நாயின் இரண்டு கண்களையும் யாரோ சிலர் நோண்டி எடுத்ததாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், கண் தெரியாமல் அவஸ்தைப்படும் நாய்க்கு துர்கா மாலதி சிகிச்சை அளித்துவருகிறார். துர்கா மாலதி, தன்னுடைய செல்ல பிராணிக்கு கொடுஞ்செயல் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார்.
இது குறித்து துர்கா மாலதி, “எங்கள் செல்ல நாய் நக்குவை வீட்டில் கட்டிப்போட்டுத்தான் வளர்த்து வந்தோம். கடந்த எட்டு நாள்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் நாய் திடீரென காணாமல் போனது. அன்று முதல் நாங்கள் நாயைப் பல இடங்களிலும் தேடினோம். ஒருவேளை கிணற்றிலோ, பள்ளங்களிலோ விழுந்திருக்கலாம் எனக் கருதி நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் பல இடங்களிலும் தேடினோம்.
எட்டு நாள்கள் கடந்த பின்னர், ஒரு நாள் இரவு நேரத்தில் கண் தெரியாத நிலையில் மோப்பம் பிடித்து வீட்டின் கேட்டுக்கு முன் வந்து படுத்துக் கிடந்தது நக்கு. மறுநாள் காலையில் நாங்கள் கேட்டை திறந்தபோது மோப்பம் பிடித்து எங்களை அடையாளம் கண்டுகொண்ட நக்கு, எங்கள் காலைச் சுற்றி வந்தது. எங்கள் நாயின் கண் பகுதியில் காயமிருந்தது. அதன் கண்களை யாரோ கம்பியால் நோண்டி எடுத்திருக்கலாம், அல்லது கண்ணில் ஆசிட் விட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலின் வேறு பாகங்களில் காயங்கள் எதுவும் இல்லை. யாரோ வேண்டுமென்றே கண்களை இப்படிச் செய்திருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நக்கு யாரையும் தொந்தரவு செய்யும் நாய் அல்ல. செல்ல நாய்க்கு இந்த கொடுமையைச் செய்தது யார் எனத் தெரியவில்லை. உயர் சிகிச்சைக்காக திருச்சூர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகிறோம். நாயின் இரண்டு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது பற்றி போலீஸில் புகார் அளித்திருக்கிறோம். அவர்கள் விசாரித்து நாய்க்கு இந்த கொடுமையைச் செய்தவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்ணில்லாத நக்குவை நாங்கள் நன்றாகக் கவனித்துக்கொள்வோம்” என்றார்.
இந்த நிலையில், இது தொடர்பாக விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் சிஞ்சு ராணி, “நாயின் கண்களை நோண்டி எடுத்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாயைக் கொடுமைப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். `தனியாக ஒருவர் இதைச் செய்ய வாய்ப்பு இல்லை. ஒருசிலர் சேர்ந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம்’ என போலீஸார் கருதுகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.