சமீபத்தில், தலைநகர் டெல்லியில், தனது நீண்ட நாள் காதலியை 35 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கொலையை மறைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அந்த காதலன் அப்தாப் கைதான பின்னர், கொலை சம்பவம் குறித்து அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது.
அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், டெல்லியில் அதேபோன்று மற்றொரு கொடூர சம்பவம் ஒன்று, தற்போது நிகழ்ந்துள்ளது. இதில், தாயும், மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில், அந்த பெண் தனது கணவரை மகனின் கையால் கொலைசெய்ய வைத்து, அதை மறைக்க உதவிசெய்துள்ளார். கணவரின் உடலை பல்வேறு துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து மறைத்துள்ளனர்.
மேலும், அவரின் உடல் உறுப்புகள் சில, கிழக்கு டெல்லியின் பாண்டவ் நகர் பகுதிகளில் வீசியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்த, கொலை செய்த நபரை கைதுசெய்துள்ளனர். தற்போது, மகன், தாய் இருவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏன் கொலை செய்தார்கள், எப்போது செய்தார்கள், எத்தனை நாள்கள் இதனை மறைத்து வைத்தார்கள், டெல்லி ஷ்ரத்தா கொலைக்கு பின் இந்த கொலை நிகழ்ந்ததா என பல்வேறு கேள்விகள் இந்த சம்பவத்தையொட்டி எழுந்துள்ளன. நாட்டையே உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாப்பிடம், உண்மை கண்டறியும் சோதனை இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.