சிவகிரி அருகே முன் துரோகத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டணம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (25). இவர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த சிவக்குமார், நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு 8 மணி அளவில் நண்பர்கள் கூப்பிடுவதாக கூறி விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் சிவகுமார் அப்பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (34) என்பவர் சிவகுமாரை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் செல்வகுமாரை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிவகுமாரின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் செல்வகுமார் மூலமாக சிவகுமாரை கொலை செய்திருக்கலாம் என்று சிவகுமாரின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.