சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு; மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் 2% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, சென்னை, சைதாப்பேட்டை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களாக பிறந்த 13 குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.28) தங்க மோதிரங்கள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் 2% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் வெப்பம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பு, விமான நிலையங்களில் எடுக்கப்படுகின்ற இந்த நடைமுறைகள் இனிமேல் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். கடந்த ஒருவாரமாக சீனாவில் 30,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சீனாவில் இருந்து வரும் பயனிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். அரசு மருத்துவமனைகளின் மூலம் தினந்தோறும் 6,00,000 பேர் பயனடைகிறார்கள், 70,000 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள், 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது.

நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரிடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார துறைக்கும் கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டது. சுகாதார துறையும் கல்வித்துறையும் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். தமிழக அரசு அந்த கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.