திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் 52 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவில், கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்திருந்த நிலையில், நடப்பாண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சன்னிதானம் செல்லும் 4 பாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் முன்பதிவு திறம்பட செயல்படுத்தப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி சபரிமலை வந்து செல்கின்றனர்.
இதனால் கடந்த ஆண்டு இதே நாளில் 9 கோடியே 92 லட்சம் ரூபாயாக இருந்த கோவிலின் வருமானம், நடப்பாண்டு நடை திறந்தபின் இதுவரை 52 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் அரவணை விற்பனைகள் மட்டும் 23 கோடியே 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.