புனே: பெண்கள் ஆடை பற்றி யோகா குரு பாபா ராம்தேவ் பேசிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. அருவருக்கத்தக்க கருத்தை கூறிய ராம்தேவ் நாட்டிலுள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த விழாவுக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா ஃபட்நவிஸ். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது பேசிய ராம்தேவ், “கூட்டத்திற்கு வருகை தந்துள்ள பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறீர்கள். உங்கள் எல்லா நன்மையும் சேரட்டும். சேலை அணிந்து வந்தவர்களுக்கு முதல் வரிசையில் அமர வாய்ப்பு கிடைத்துள்ளது. சிலர் சல்வாரில் வந்துள்ளீர்கள். சிலர் வீடுகளில் இருந்து சேலை கொண்டுவந்தும் கூட மாற்ற நேரமில்லாததால் சல்வாரில் இருக்கிறீர்கள். நீங்கள் சேலை அணிந்திருந்தாலும் அழகு. அம்ருதாவை போல் சல்வார் அணிந்திருந்தாலும் அழகு. இல்லை என்னைப் போல் ஏதும் அணியாமல் இருந்தாலும் கூட அழகுதான்” என்றார். அவருடைய இந்தப் பேச்சைக் கேட்டு கூட்டத்திலிருந்த பெண்கள் தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் அந்த வீடியோவால், ராம்தேவ் “சமூக கோட்பாடுகளுக்காகத் தான் ஆடை அணிகிறோம். 10 வயது வரை நாம் ஏதும் அணியாமல் சுற்றியிருக்கிறோம் தானே. இந்தக் கால குழந்தைகள் தான் ஐந்தடுக்கில் ஆடை அணிகின்றனர்” என்றார்.
இது குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், “ஸ்வாமி ராம்தேவ் துணை முதல்வர் மனைவியின் முன்னால் பெண்களை இழிவாகப் பேசியது கண்டனத்துக்குரியது. வீடியோவைக் காணும் அவர் கருத்தால் எல்லா பெண்களும் வேதனையடைந்தது தெரிகிறது. அவர் நாட்டுப் பெண்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டும்” என்று கோரியுள்ளார்.
திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா, “டெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து பதஞ்சலி பாபா ஏன் பெண்கள் ஆடையணிந்து ஓடினார் என்பது புரிந்துவிட்டது. அவருக்கு சேலையும், சல்வாரும் தான் இஷ்டமென்று சொல்லியிருக்கிறார். அவருக்கு பார்வை கோளாறு இருக்கிறது. அதனால் அவரது கருத்துகள் இப்படி இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.