மேடைகளில் சொல்லும் கதைகள் நாம் தமிழர் தம்பிகள் மத்தியில் ரொம்பவே பிரபலம். இலங்கை சென்று வந்த கதைகள், ஆமைக்கறி சாப்பிட்ட கதை போன்றவை சமூகவலைதளங்களில் ட்ரோல் வீடியோ உருவாக்குபவர்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள் போன்றோருக்கு கண்டண்ட் மெட்ரீயலாக உள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை நாம் தமிழர் சார்பாக பல்வேறு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான் இந்திய ராணுவம் தன்னை சுற்றி வளைத்த கதையை கூறி கூட்டத்தினரை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
“நமக்கு எல்லா பக்கமும் ஆள் இருக்கு. டெல்லி விண்ணூர்தி நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தேன். தம்பி பிரபு வண்டியை எடுக்க போய்விட்டான். நான் தனியாக வந்து கொண்டிருந்தேன். என்னை இந்திய ராணுவம் சுற்றி வளைத்துவிட்டது. என் தம்பி பதறிப்போய் விட்டான். சுற்றி வளைத்தவர்கள், அண்ணா ஒரு செல்பி அண்ணா, ஒரு புகைப்படம் அண்ணா என கேட்டனர்” எனக்கூறி சீமான் தனது டிரேட் மார்க் சிரிப்பு சிரிக்க அரங்கம் கைத்தட்டி ரசித்தது.
‘அண்ணனை ரொம்ப பிடிக்கும்யா, அண்ணனை பத்திரமா பார்த்துக்கோங்க என ராணுவத்தினர் என் உடன் வந்தவர்களிடம் கூறினர். கொஞ்ச நேரத்துல பயம் காமிச்சிட்டீங்களேப்பா என என் உடன் வந்தவர்கள் ராணுவத்தினரிடம் கூறினர். என்னை விண்ணூர்திக்கு ஏற்றிவிட்டு ஒரு சல்யூட் போட்டனர். நமக்கு எல்லா பக்கமும் ஆள் இருக்கு. நாகலாந்து, திரிபுரா, மேகாலயா, காஷ்மீர் எல்லா இடத்திலும் நமக்கு ஆள் இருக்கு. பஞ்சாப்பில் எனக்கு நிறைய சொந்தக் காரங்க இருக்காங்க. எழுபது, எண்பது வயது ஆள்கள் எல்லாம் என்னை சீமான் அண்ணா என்று தான் கூப்பிடுவார்கள்.
ஒரு காலம் வரும், அன்று நம் தலைவனின் கனவை நனவாக்கி காட்டுவோம். அன்று தான் நம் தலைவனுக்கு கொடுக்கும் உண்மையான பிறந்தநாள் பரிசாக இருக்கும்.
தமிழ் பேரினத்தின் அடையாளம், வீரம், பெருமை, முகவரி எல்லாமுமாக ஒருங்கிணைந்து நிற்கும் ஒற்றை உருவம் தான் பிரபாகரன் என்பதை இளைய சமூகத்தினர் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரபாகரன் பேரெழுச்சியின் பெருவடிவம் என்று நெடுமாறன் ஐயா புத்தகம் எழுதியுள்ளார். அதை வாங்கி படிக்க வேண்டும்.
உலகத் தமிழ் பேரினத்தின் ஒப்பற்ற தலைவன், ஆகச்சிறந்த போராளி நமது அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வோம். என் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று சீமான் பேசினார்.