Baba Ramdev Apology : பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல யோகா ஆசிரியருமான ராம் கிசான் யாதவ் என்ற பாபா ராம்தேவ் பெண்களுக்கு எதிராக முறையற்ற வகையில் கருத்து தெரிவித்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்திருந்தது. அதைத்தொடர்ந்து, மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவரின் கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து, மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவர் சகங்கருக்கு, பாபா ராம்தேவ் எழுதியுள்ள கடிதத்தில்,”பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும், பெண்களை மேம்படுத்துவதற்காக உழைத்து வருகிறேன்.
மத்திய அரசின் பெண்கள் முன்னேற்ற திட்டங்களில் பங்கெடுத்து, என்னால் முடிந்த முயற்சிகளை செய்து அதனை ஊக்குவித்து வருகிறேன். எனவே, பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை என்பதையும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோ முழுமையானது இல்லை என்பதும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
இருப்பினும், எனது கருத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். எனது கருத்தால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பெண்கள் சுடிதார், சேலையில் இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறார்களோ, அதுபோல் ஆடைகள் இன்றியும் அவர்கள் நன்றாகவே இருப்பார்கள் என பாபா ராம்தேவ் தெரிவித்ததாக கூறப்பட்டது. இரண்டு நாள்களுக்கு முன்னர் தானேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாஸ் அருகில் அமர்ந்திருந்தபோது ராம்தேவ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பிறகு, மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவர் சகங்கர் மராத்தி மொழியில் வெளியிட்ட ட்வீட்டில்,”பாபா ராம்தேவ் என்ற ராம் கிசான் யாதவ், தானேயில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமான கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கவனித்த மாநில மகளிர் ஆணையம், ராம் கிசான் யாதவ் என்கிற பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து பாபா ராம்தேவ் கடிதம் வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் மட்டுமின்றி டெல்லி மகளிர் ஆணையமும் பாபா ராம்தேவின் கருத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பெண் ஆசிரியரிடம் வகுப்பறையில் அத்துமீறிய மாணவர்கள் – பாய்ந்தது வழக்கு