தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த குறவஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் வேன் இன்று காலை அதம்பை கிராமத்திலிருந்து பள்ளிக் குழந்தைகளை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்த வேன் அதம்பை பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த எட்டு குழந்தைகள் காயமடைந்ததை அடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்த குழந்தைகள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த எட்டு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் தேசிகா மற்றும் ரோகித் என்ற இரண்டு குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகளை பார்க்க பள்ளி நிர்வாகம் சார்பில் யாரும் வராததால் பெற்றோர்கள் திடீரென பட்டுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெற்றோர்களை சமாதானம் செய்ததால் போராட்டத்தை விளக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தினமும் வரும் பள்ளியின் வேன் பராமரிப்பு பணிக்காக சென்றதால் பள்ளி குழந்தைகளை அழைத்து வர தனியார் வேன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வேன் சரியான பராமரிப்பு இன்றி காணப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்திற்குள் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.