கொச்சி: கேரள மாநிலத்தில் அதானி குழுமம் ரூ.7,500 கோடியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு, மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மீனவர்கள் அதானியின் விழிஞ்சம் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், துறைமுக கட்டுமானப் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முடங்கியுள்ளன. கட்டுமானப் பணிகள் நடைபெற தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதானி துறைமுக கட்டுமான லாரிகளை நேற்று முன்தினம் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள விழிஞ்சம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்ட கும்பல் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில், காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டதுடன், 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஏராளமான உள்ளூர் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த வன்முறை சம்பவத்தையடுத்து, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அடையாளம் காணக் கூடிய வகையிலான 3,000 பேர் மீது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தால் ரூ.85 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் நிலையத்திலிருந்து கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ரோமன் கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.