கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. போட்டிகளுக்கு மத்தியில் ரசிகர்களின் ஆரவாரமும், கொண்டாட்டமும் களைகட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் கத்தார் புறப்பட்டு சென்று தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் மகிழ்ச்சியுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஈரான் vs அமெரிக்கா
இந்திய நேரப்படி இன்று (நவம்பர் 29) நள்ளிரவு 12.30 மணிக்கு ஈரான், அமெரிக்கா இடையில் லீக் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஆண்கள் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு ஒன்று போடப்பட்டது. அதில், ஈரான் நாட்டு தேசியக் கொடியின் நடுவே ”Allah” என்பதை குறிப்பிடும் தேசிய சின்னத்தை நீக்கிவிட்டு பதிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹீரோவான கேசிமிரோ… சம்பவம் பண்ண புரூனோ… ரவுண்ட் ஆஃப் 16ல் நுழைந்த Brazil, Portugal!
ஃபிஃபாவிடம் ஈரான் புகார்
இதைக் கவனித்த ஈரான் கால்பந்து கூட்டமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கால்பந்தின் சர்வதேச கூட்டமைப்பான ஃபிஃபாவிடம் (FIFA) புகார் அளித்திருக்கிறது. அமெரிக்க கால்பந்து அணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அணியை நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஈரானின் கொடியில் மாற்றம் செய்து போட்ட பதிவை கத்தாரில் இருக்கும் ஈரான் மற்றும் அமெரிக்க ரசிகர்களும் விரும்பவில்லை.
தேசியக்கொடி சர்ச்சை
சமூக வலைதளங்களில் மிகவும் காரசாரமாக விமர்சனம் செய்து வருகின்றனர். விஷயம் விஸ்வரூபம் எடுப்பதை கவனித்த அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக அந்த கொடியில் மாற்றம் செய்து உண்மையான கொடியை பதிவிட்டு திருத்திக் கொண்டது. இதுதொடர்பாக அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அளித்துள்ள விளக்கத்தில், ஈரான் நாட்டில் மனித உரிமைகளுக்காக பெண்கள் போராடி வருகின்றனர்.
ஹிஜாப் போராட்டம்
கடந்த செப்டம்பர் மாதம் ஈரானில் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம் சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் போலீசார் கைது செய்தனர். அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்தார். ஆனால் இதை போலீசார் மறுத்தனர். இதன் தொடர்ச்சியாக ஈரானில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாப்பை எரித்தும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
FIFA World Cup-ல் அடுத்த ஷாக்… நொறுங்கி போன பெல்ஜியம்… முரட்டு அடி மொராக்கோ!
பின்வாங்கிய அமெரிக்கா
இந்த விவகாரத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகியது. தற்போதும் ஈரான் நாட்டு பெண்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ஈரான் பெண்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையிலேயே தேசியக் கொடியில் மாற்றம் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் 24 மணி நேரத்திற்குள் அதை மாற்றிவிட்டு, உண்மையான ஈரான் தேசியக் கொடியை பதிவிட்டனர்.
அரசியல் சண்டை
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க கால்பந்து அணியின் பயிற்சியாளர் கிரெக் பெர்ஹால்டர், ஈரான் தேசியக் கொடி சர்ச்சை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இதற்காக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இதில் எங்களின் பங்கும் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் சர்வதேச அரசியல் அரங்கில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பிற்கும் இடையில் சுமூக உறவு கிடையாது. இத்தகைய சூழலில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர்பான பதிவால் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.