ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம்-வேதளை சாலையில் நேற்று முன்தினம் இரவு கடற்கரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த சாலையில் வேகமாகச் சென்ற சொகுசு காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் கொக்கைன் போதைப் பொருளுக்கு தேவையான மூலப்பொருட்கள் 360 கிலோ இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காரில் இருந்த ஜெயினுதீன் மற்றும் சர்ப்ராஸ் நாவஸ் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜெயினுதீன் கீழக்கரை நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் என்பது தெரியவந்தது. அதேபோன்று மற்றொரு நபரான சர்ப்ராஸ் நவாஸ் கீழக்கரை நகராட்சியின் 19 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பதும் தெரியவந்தது. போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு 360 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்புள்ள போதை பொருள் இலங்கைக்கு கடத்த முயன்று போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். திமுகவைச் சேர்ந்த இருவரும் சென்னை – ராமநாதபுரம் சரக்கு லாரி நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. மீனவர்கள் போர்வையில் நாட்டுப்படகுகள் இலங்கைக்கு போதை பொருள் கடத்த இருந்தது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அதிகப்படியான தாக்குதல் நடத்துவார்கள் என மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என மத்திய-மாநில உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.