தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிராமப்புறங்கள் தொடங்கி நகர்ப்புறப் பகுதிகள் வரையில் உள்ள இண்டர் நெட் மையங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை செய்து கொடுக்கிறார்கள். இதற்காக மக்கள் இண்டர் நெட் மையங்களை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்து விட முடிகிறது.
மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கான இன்று தமிழகம் முழுவதும் 2,811 பிரிவு அலுவலங்களிலும் சிறப்பு முகாம்களுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் இன்று முதல் 31.12.2022 வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 மணி வரை ஆதாரை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும். காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம்.
100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் மானியங்களும் தொடர்ந்து பின்பற்றப்படும். ஆதாரை இணைக்கும்போது மானியங்கள் இரத்தாவதாக உண்மைக்கு மாறாக பரப்பப்படுகின்றது. மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பதால், இலவச 100 யூனிட், கைத்தறி மற்றும் விசைத்தறி மானியத்தில், குடிசை மற்றும் விவசாய இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. முதல்வரின், வழிகாட்டுதலின்படி நடைபெறும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுகிறேன்.
ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஒரே ஆதாரை வைத்து 10 மின் இணைப்பு கூட இணைக்கலாம். மின் இணைப்பு எண் பெயர் மாற்றாதவர்கள், அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியம் தற்போது ரூ.1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இழப்புகளை சரிசெய்யவும், மேம்படுத்தவுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது” என்றார்.