சென்னை: கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழை விடுமுறையை அறிவித்துள்ளனர்.
கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் நீலிகிரி, கோவை உள்ளிட்ட சில மேற்கு மாவட்டங்களிலும் மழை பெய்தது.
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில், இன்று 29 ஆம் தேதி முதல் டிச.1 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 – 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.