நாகர்கோவில்: கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம்தேதி, ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்துக்கு காரணமான முகமது ஷாரிக் தங்கி இருந்ததாக கூறப்படும் பகுதிகளில் மங்களூரு போலீசார் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்ட விசாரணைக்காக மங்களூரு போலீசார் நேற்று நாகர்கோவில் வந்தனர். பின்னர் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த லாட்ஜில் தான், முகமது ஷாரிக் 4 நாள் தங்கி இருந்துள்ளார். லாட்ஜில் இருந்து சில ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். பிரேம் ராஜ் என்ற பெயரில் அவர் போலி ஆதார் அட்டையை காட்டி அறை எடுத்து தங்கி உள்ளார். ஆனால் அவரை சந்திக்க யாரும் வரவில்லை என்று லாட்ஜ் பணியாளர்கள் கூறி உள்ளனர். முகமது ஷாரிக் யாரை சந்திக்க சென்றார் என்பது பற்றி 1 மணி நேரத்துக்கு மேல், விசாரணை நடத்தினர்.