சென்னை விமான நிலையத்தில் அரிய வகை குரங்கு குட்டிகள் பறிமுதல்.!

சென்னையில் உள்ள மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். 

அந்த கண்காணிப்பின் போது சென்னையைச் சேர்ந்த முகமது நசிருதீன் என்ற பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதனால், அவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர் மாற்றி மாற்றி பேசியதால் அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில், ஏதோ ஒன்று லேசாக அசைவது போல் தெரிந்தது. 

அதன் பின்னர் அதிகாரிகள், அந்த பையை திறந்து பாா்த்ததில் பச்சை நிற கூடை ஒன்றில் நான்கு அரிய வகை குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பயணியிடம் விசாரணை செய்த போது, “அவை அபூர்வ வகை குரங்கு குட்டிகள். இதை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். 

ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், அவரிடம் இல்லாததால் நான்கு குரங்கு குட்டிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்ததில் நான்கு குட்டிகளில் இரண்டு குட்டிகள் இறந்து கிடந்தன.

மேலும், உயிருடன் இருந்த 2 குரங்கு குட்டிகளை பார்த்ததில், அவை உலகிலேயே நீண்ட வாலுடன் கூடிய சிறிய குரங்கு இனமான ‘பிக்மி மார்மோசெட்’ என்ற வகையை சேர்ந்தவைகள் என்பது தெரியவந்தது.

அமேசான் படுகையில் உள்ள மழைக்காடுகளை பூர்வீகமாக கொண்ட இந்த குரங்கினம், பிரேசில், கம்போடியா மற்றும் பெரு நாட்டிலும் காணப்படுகிறது. மேலும், இறந்து கிடந்த இரண்டு குரங்கு குட்டிகள், மயங்கிய இலை குரங்கு வகையை சேர்ந்தவையாகும்.

இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட காடுகளில் காணப்படுகின்றன. இது ஒருவகையான பாலூட்டி வகையாகும். இதையடுத்து, உயிருடன் உள்ள மற்ற இரண்டு குரங்கு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்துக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.