புதுடெல்லி: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைபடத்தை பிரச்சார நெடி கொண்ட படம் என விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வுக்குழு தலைவரும் தன் சக நாட்டவருமான நடாவ் லேபிடுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடாவ் லேபிடுக்கு ஒரு திறந்த மடல். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மீது அவர் முன்வைத்த விமர்சனத்தை ஒட்டி இதை எழுதுகிறேன். இதனை எனது இந்திய சகோதரர்கள், சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஹீப்ரூவில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். அந்தக் கடிதம் சற்று நீளமானது. அதனால் ஒரு வரியில் அதனை விளக்குகிறேன். நடாவ் நீங்கள் வெட்கப்பட வேண்டும். இந்திய கலாசாரத்தில் விருந்தினரை கடவுளுடன் ஒப்பிடுவர். ஆனால் அதனை நீங்கள் எவ்வளவு மோசமாக சிதைக்க முடியுமோ அவ்வளவு மோசமாக சிதைத்துள்ளீர்கள். உங்களை கோவை சர்வதேச திரைப்பட திருவிழாவின் தேர்வுக் குழு தலைவராக அழைத்துள்ளார்கள். அவர்கள் உங்களுக்கு அளித்த மரியாதையை, அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
An open letter to #NadavLapid following his criticism of #KashmirFiles. It’s not in Hebrew because I wanted our Indian brothers and sisters to be able to understand. It is also relatively long so I’ll give you the bottom line first. YOU SHOULD BE ASHAMED. Here’s why: pic.twitter.com/8YpSQGMXIR
— Naor Gilon (@NaorGilon) November 29, 2022
லாபிட் பேசியது என்ன? முன்னதாக நேற்று சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாஃபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத்தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம்.இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே இந்த திரைப்படம் உள்நாட்டில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் லேபிட்டின் கருத்து பேசுபொருளானது. இந்தச் சூழலில் இஸ்ரேல் தூதர் லேபிட் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மும்பை தாக்குதல் சம்பவத்தின் 14வது நினைவு தினத்தை ஒட்டி இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலான், “இன்று மும்பை தாக்குதல் நடந்த 14-வது நினைவு தினத்தை அனுசரிக்கிறோம். இந்தியாவும் இஸ்ரேலும் நீண்ட காலமாக பயங்ரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இஸ்ரேல் தோளாடு தோள் கொடுக்கும். நடந்ததை நாங்கள் இருவரும் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். பயங்கரவாதத்துக்கான நிதி ஆதாரத்தை தடுப்பது குறித்து இரண்டு முறை சர்வதேச மாநாடுகளை ஒருங்கிணைத்துள்ளது வரவேற்கத்தக்கது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.