`பல வருஷமா கோரிக்கை வைக்கிறோம். ஆனா…’- மழையில் தகர கொட்டகை அமைத்து சடலத்தை எரித்த அவலம்!

கொட்டும் மழையில் தகர கொட்டகை அமைத்து உடலை எரித்துள்ளனர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தின் மக்கள். சுற்றுச்சுவர், தகன மேடை அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் திறந்த வெளியில் சடலத்தினை எரிக்கும் அவலம் நிகழ்வதாக அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி இந்திரகாலனி பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டிற்கு சுற்றுசுவர், தகன மேடை இல்லை என்பதால் திறந்த வெளியில் சடலத்தினை எரிக்கும் நிலை அங்கு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெரும் வேதனையை அனுபவித்து வருவதாக சொல்கின்றனர் அக்கிராமத்தினர். அந்தவகையில் நேற்றும்கூட அங்கு திடீரென மழை பெய்ததால், உயிரிழந்தவரின் உடலை எரிக்க, தாஙக்ளே தகர கொட்டகை அமைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்டது இந்திரா காலனி. இப்பகுதி மக்களுக்கு இனாம்மணியாச்சி ஊருக்குள் செல்லக்கூடிய முகப்பில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு திறந்த வெளியில் இருப்பதால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்த வெளியில் தான் சடலங்களை புதைப்பது அல்லது எரியூட்டும் நிலை உள்ளது. சுடுகாட்டினை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், தகன மேடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் தற்பொழுது வரை நடவடிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. இதுமட்டுமன்றி திறந்த வெளியில் சடலத்தினை எரியூட்டும் போது அப்பகுதி வழியாக பொது மக்கள் செல்லமுடியாத நிலையும் அங்கு ஏற்படுகிறது.

image

குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சுடுகாடு பகுதியில் எவ்வித பாதைகளும் சரியாக இல்லை என்பதால் மிகுந்த சிரமத்துடன் தான் சடலத்தினை கொண்டு செல்லும் நிலையும் உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள். இப்படியான சூழலில்தான் நேற்று அப்பகுதியை சேர்ந்த கற்பூர ராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை எரியூட்ட அப்பகுதி மக்கள் கொண்டு வந்த போது திடீரென மழை பெய்ததால் வேறு வழியின்றி தகரங்களை வைத்து தாங்களே கொட்டகை அமைத்து உடலை எரியூட்டும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து நடவடிக்கை இல்லை, ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தால், தனக்கு ஓட்டுப்போடவில்லை என்று கூறி அவர் வசதி செய்துதர மறுப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இனியாவது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

image

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு என்பதால்  இந்த சுடுகாட்டிற்கு தகனமேடை மற்றும் சுற்று சுவர் அமைக்க முடியவில்லை எனவும் இதேபோல் அருகில் உள்ள மற்ற பகுதிகளில் அனைத்து சமுதாய மயானங்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் தகன மேடைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் – கோபத்தை கட்டுப்படுத்த ‘App’ கண்டுபிடித்த கரூர் பள்ளி சிறுவர்கள்! அசரவைக்கும் அம்சங்கள்!

– மணிசங்கர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.