மாற்றுத்திறனாளிகளை கையாள்வதற்கு பயிற்சி அவசியம்: டிஜிபிக்கு உத்தரவு!

மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் மாற்றுத் திறனாளி வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த பொய் புகாரில், தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளார்.

தான் மாற்றுத் திறனாளி எனக் கூறிய முருகானந்தத்தை தாக்கியதுடன் ஆபாசமாக வார்த்தையில் திட்டியுள்ளார். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், 2020 மார்ச் 10ஆம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முருகானந்தம் தாக்கல் செய்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடு வழங்கவும், உதவி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் முதுகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இத்தொகையில் 4 லட்சம் ரூபாயை மாநில அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், குற்ற வழக்குகளில் மாற்றுத் திறனாளிகள் கைது செய்யபடும் போது கையாள்வது தொடர்பாக கான்ஸ்டபிள் முதல் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பது தொடர்பாக மாவட்டந்தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு வழக்குச் செலவாக 25 ஆயிரம் ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.