விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன். விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க துணைச் செயலாளராக இருந்து வந்த இவர், கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டிருந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையில் 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்த ஆதித்தனின் மனைவி சாந்தி, விக்கிரவாண்டி போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின், குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

முதற்கட்டமாக குற்ற சம்பவத்தில் தொடர்புடைய லட்சுமி நாராயணன் மற்றும் விஷ்ணு என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, ராமு, ராகவன், மதன், வினோத், தேவநாதன் ஆகியோரை கடந்த 26-ம் தேதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில், முன் விரோதத்தின் காரணமாக திட்டம் தீட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், பரந்தாமன், நாராயணமூர்த்தி என்பவர்களும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும், அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தோம். “2018-ம் ஆண்டு பாலம் கட்டும் கான்ட்ராக்ட் பணி ஒன்றுக்கு, ஆதித்யன் தரப்பு மண் அடித்துள்ளனர். அப்போது, அளவுக்கு மீறி மண் எடுப்பதாக குற்றம் சாட்டிய எதிர் தரப்பினருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில், எதிர் தரப்பினர் ஆதித்யனை கத்தியால் வெட்டியுள்ளனர். அந்த சம்பவம் குறித்து ஆதித்யன் தரப்பு புகார் கொடுத்ததோடு, வழக்கு தொடர்ந்துள்ளனர். அதன்பின் 2019, 2020-ன் போது இவர்கள் சென்று அவர்களை அடிப்பது என இரண்டு முறை பிரச்னை நடந்துள்ளது. அதன் பின் இரண்டு வருடம் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்து வந்தது.

2018 போது நடந்த சம்பவம் தொடர்பாக ஆதித்யன் தரப்பு தொடர்ந்த வழக்கு, இன்றைய (29.11.2022) தினம் விசாரணைக்கு வருகிறது. அதில் ஆதித்யன் ஆஜராகி சாட்சியம் சொல்வதாக இருந்தது. எனவே, ஆதித்யனிடம் எதிர் தரப்பினர் சம்பவத்திற்கு முன்பாகவே சமாதானமாக போகும்படி பொதுவான ஆட்களை வைத்து பேசியுள்ளனர். அதற்கு ஆதித்யனோ, ‘எதுவானாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்’ என மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான், சம்பவம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக ஆதித்யனின் எதிரி தரப்பில், ஒருவர் வீட்டினில் பிறந்தநாள் விழா நடந்துள்ளது. அன்று, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் ஒன்றாக இருந்தபோது, மது அருந்தியபடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, ஆதித்யனை பற்றி பேச்சு எழுந்ததும், “இனி இவனை விடக்கூடாது” என்ன தீவிரமாக முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், ராமு தரப்பின் நண்பரான கோலியனூர் ராகவன் நாட்டு வெடிகுண்டை தயாரித்து எடுத்துக்கொண்டு, மதன் என்பவருடன் ஆதித்யனை தீர்த்துக்கட்ட வேண்டும் என வந்துள்ளனர். ஆதித்யன் மாலை நேரங்களில் பனையபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இருப்பார் என தெரிந்துக்கொண்டு, 24-ம் தேதி மாலை அங்கு சென்று நோட்டமிட்டு உறுதி செய்துக்கொண்டு, காத்திருந்துள்ளனர்.

பின், ஆதித்யன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின் தொடர்ந்து சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத வாதானூர் கால்வாய் அருகே தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடியை ஆதித்யன் மீது வீசியுள்ளனர். ஆனால், அது வெடிக்காமல் போகவே, ஆதித்யனின் வண்டியை மடக்கி, ஆதித்யனை ஒருவர் கத்தியால் குத்த மற்றொருவர் வெட்டியுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் திட்டமிட்டே போன் அழைப்பை தவிர்த்து, வாட்ஸ் ஆப்பில் தொடர்பு வைத்து கொண்டிருந்துள்ளனர். குறிப்பாக, ‘தாங்கள் யாரும் இதில் ஈடுபடவில்லை’ என்பதை போல, வேறு வேறு இடத்தில் இருப்பது போலவும் செயல்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தற்போது வரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தேடப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பதிந்த ஐந்து குற்ற பிரிவுகளுடன், வெடிபொருட்களை பயன்படுத்தியதற்காக கூடுதலாக ஒரு பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.