அமெரிக்காவின் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் வசித்து வந்தவர் அல்டா அபாண்டென்கோ (Alta Apantenco). இவருக்கு மெலிசா ஹைஸ்மித் (Melissa Highsmith) என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், தனது குழந்தையை பராமரித்துக்கொள்வதற்காகக் குழந்தை பராமரிப்பாளர் வேண்டுமென நாளிதழில் விளம்பரம் கொடுத்திருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்து வந்த ஒருவர், ஆகஸ்ட் 23, 1971 அன்று வீட்டிலிருந்த மெலிசா ஹைஸ்மித்தை கடத்திச் சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, இந்தக் குழந்தையின் பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சார்லஸ்டன் அருகே மெலிசா ஹைஸ்மித் இருப்பதாக, உறவினர்களுக்கு ஒரு குறிப்பு கிடைத்தது. அதன்பிறகு அந்த பெண்ணை சந்தித்து டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர். மேலும், மெலிசா ஹைமித்தின் பிறப்பு, அவருடைய தாயாரின் குறிப்புகள் மூலம் இவர் தான் மெலிசா ஹைஸ்மித் என்பது உறுதியானது. அதாவது 51 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தை மெலிசா என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, ஃபோர்ட் வொர்த்தில் உள்ள குடும்ப தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் மெலிசா தன்னுடைய தாய், தந்தை மற்றும் அவருடைய சகோதரர்கள் இருவரை சனிக்கிழமை சந்தித்தார்.
இது தொடர்பாக மெலிசா ஹைஸ்மித்தின் சகோதரியான ஷரோன் ஹைஸ்மித்,” என் சகோதரி சிறுவயதில் காணாமல் போனபோது, என் அம்மா தான் என்னுடைய சகோதரியைக் கொலை செய்துவிட்டு, இதை மூடி மறைக்கிறார் எனப் பேசிவந்தனர். அதனால், அம்மா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இனி நாங்கள் மெலிசாவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இழந்த 50 வருடத்தை ஈடுசெய்யவும் விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.