இமாலய இலக்கை துரத்தி பிடித்த இலங்கை: சமனில் முடிந்தது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்



ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதல் பேட்டிங்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இன்று பல்லேகலை மைதானத்தில் இலங்கை எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து மைதானத்தில் களமிறங்கியது.

ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான்(Ibrahim Zadran) அதிரடியாக விளையாடி 162 ஓட்டங்களை விளாசினார்.

138 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 162 ரன்கள் எடுத்த இப்ராஹிம் சத்ரான், 39-வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

அடுத்த 38 பந்துகளில் 58 ஓட்டங்கள் அதிரடியாக குவித்தார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியான இன்றைய ஆட்டத்தில் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில், இப்ராஹிம் சத்ரான் அதிரடியால் 314 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை இலங்கை அணிக்கு முன்வைத்தது.

விரட்டி பிடித்த இலங்கை

314 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

பாத்தும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களும், குசல் மெண்டிஸ் அரைசதம் கடந்து 67 ஓட்டங்களையும் குவித்து இருந்த போது விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

பின்னர் வந்த தினேஷ் சண்டிமால் 33 ஓட்டங்களும், தசுன் ஷனக 43 ஓட்டங்களும் துனித் வெல்லலகே 31 ஓட்டங்களையும் அணிக்காக குவித்தனர்.

மிகப் பொறுப்புடன் விளையாடி வந்த சரித் அசலங்கா ஆட்டம் இழக்காமல் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என விளாசி 83 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் இலங்கை அணி 49.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 314 என்கிற வெற்றி இலக்கை அடைந்து போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது.


சமனில் முடிந்த ஒருநாள் தொடர்

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து, முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், மூன்றாவது போட்டியில் இலங்கை அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான்-இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி தொடர் சமனில் முடிந்துள்ளது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.