கடந்த மார்ச் 27-ல், 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற வில் ஸ்மித், விருது விழாவைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தது உலகம் பேசும் சர்ச்சை ஆகியிருந்தது.
வில் ஸ்மித்தின் மனைவி ஜேடாவுக்கு அலோபீசியா என்ற நோய்த் தாக்கத்தால் முடி கொட்டத் தொடங்கியிருந்ததால் தலையை முழுக்க மொட்டை போட்டுக்கொண்டார். அதைக் குறிப்பிட்டு கிறிஸ் ராக் பேசியதால், அவர் கன்னத்தில் அறைந்து, “என் மனைவியின் பெயரை இழுக்காதே!” என ஆக்ரோஷமாகச் சொன்னார் ஸ்மித். இதற்காக அதே மேடையிலேயே ஸ்மித் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இதையடுத்து வில் ஸ்மித், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். ஆஸ்கர் அகாடமியும் அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் ஸ்மித்தின் `Emancipation’ என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள வில் ஸ்மித், “ஆஸ்கர் விருது விழாவில் நான் நடந்துகொண்ட விதம், வெளியாகவிருக்கிற எனது திரைப்படத்தைப் பாதிக்கலாம்” என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
இது பற்றி அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியவர், “ஆஸ்கர் விருது விழாவில் நான் நடந்துகொண்ட விதம் குறித்து மிகவும் வருத்தப்பட்டேன்.

அன்று இரவு மிகவும் கொடூரமான இரவாக இருந்தது. இருப்பினும் நான் செய்த அந்தச் செயலை நியாயப்படுத்த விரும்பவில்லை. அன்று நான் வீட்டுக்குச் சென்றவுடன் என் வீட்டில் இருக்கும் ஒன்பது வயது சிறுவன் ஒருவன், ‘அவரை ஏன் அடித்தீர்கள், வில் மாமா?’ என்று கேட்டான். அப்போது ஒரு மனிதனாக என்னை நானே வெறுத்தேன்” என்று கூறினார்.
மேலும், “நான் செய்த வெறுக்கத்தக்க இச்செயலுக்காக எனது திரைப்படங்களைக் காண மக்கள் தயாராக இல்லை என்றால், அவர்களது முடிவை நான் முற்றிலும் மதித்து ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், எனது செயல்களால் படக்குழுவிற்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.