புனே, ”நம் கடற்படையில் புதிதாக இணைக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்துடன், விமானங்களின் ஒருங்கிணைப்பு அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்,” என, கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவின் புனேவில் நேற்று நடந்த தேசிய ராணுவ அகாடமி பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற ஹரிகுமார் கூறியதாவது:
நம் கடற்படையை நவீனமயமாக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 1960ல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய கப்பல் நம் படையில் இணைக்கப்பட்டது.
இதன்பின் படிப்படியாக பெரிய கப்பல்களை தயாரிக்க துவங்கினோம். சமீபத்தில் நம் படையில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பல், 76 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
கடந்த ஏழு ஆண்டுகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 29 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளன.
இவை போக 45 கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; 43 கப்பல்கள் இந்தியாவில் தயாராகின்றன.
முப்படைகளும் பாலின பாகுபாடு இன்றி செயல்படுகின்றன. கடற்படை உட்பட அனைத்து படைப் பிரிவிலும் பெண் அதிகாரிகள் பணியில் உள்ளனர்.
தற்போது கடற்படை வீராங்கனையரை பணியில் நியமிக்க உள்ளோம்.
நடப்பு ஆண்டில் 3,000 கடற்படை வீரர்களுக்கான காலி இடங்களுக்கு, 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில், 82 ஆயிரம் பேர் பெண்கள்.
நம் கடற்படையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பலுடன் விமானங்களை ஒருங்கிணைக்கும் பணி துவங்கி உள்ளது. பொதுவாக படையில் கப்பல் இணைக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் இந்த பணி நடக்கும்.
தற்போது விமானங்களில் இயக்க செயல்முறைகளை ஒவ்வொன்றாக சோதித்து கப்பலுடன் ஒருங்கிணைத்து வருகிறோம்.
இந்தப் பணி அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்