சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 2-வது நாளாக சிறப்பு கவுன்ட்டர்களில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 26 லட்சம் பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக, டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுன்ட்டர்களில் இதற்கான பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்நுகர்வோர் அதிக அளவில் குவிந்தனர்.
2-வது நாளாக நேற்றும் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள சிறப்பு கவுன்ட்டர்களில் ஆதார் எண்ணை இணைக்க ஏராளமானோர் திரண்டனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 26 லட்சம் நுகர்வோர் மின்இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கூடுதல் கவுன்ட்டர்களை திறக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முகாமில் ஒரே ஒரு சிறப்பு கவுன்ட்டர் மட்டுமே உள்ளது. இதனால், ஆதார் எண்ணை இணைக்க தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும்” என்றனர். ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியாமல் நேற்றும்பலர் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஒரு அலுவலகத்துக்கு ஒரு சிறப்பு கவுன்ட்டர் மட்டுமே திறக்க தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. எனினும், நுகர்வோரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நேரத்தில் ஏராளமான நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க முற்படுவதால் மின்வாரியத்தின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், ஆன்லைனில்மின்கட்டணம் செலுத்த முடியாதநிலை ஏற்படுகிறது. மின்வாரியசர்வரின் திறனை அதிகரிக்கும்பணி நடந்து வருகிறது. விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்படும்” என்றனர்.
ஊழியர்கள் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் சிறப்பு முகாம்கள் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பிட்டுள்ளதாவது: சிறப்பு முகாமுக்கு வரும் நுகர்வோருக்கு போதிய இருக்கை வசதி செய்து தரவேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கவுன்ட்டர்களில் ஒரு அதிகாரியை நியமித்து மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும். கூடுதல் கணினிகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். கவுன்ட்டர்களில் உள்ள ஊழியர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோரிடம் இருந்து ஏதாவது பணம் வசூலிக்கின்றனரா என்பதை அந்த அப்பிரிவு அலுவலகத்தின் அதிகாரி கண்காணிக்க வேண்டும். ஊழியர்கள் யாராவது பணம் வசூலித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செயற்பொறியாளர்கள் தினமும் பிரிவு அலுவலகத்துக்குச் சென்று சிறப்பு கவுன்ட்டர்களில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன், தினசரி அறிக்கையை மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |