தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், காலியான காவல் நிர்வாக பிரிவு ஏடிஜிபி பதவியை, தலைமையிட ஏடிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கடராமன் ஐபிஎஸ் கூடுதலாக கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபி பதவியை தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக கனிப்பார் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக ஜெயராம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊரக ஏ.எஸ்.பி-யாக பணியாற்றி வந்த சந்தேஷ் ஐபிஎஸ், எஸ்.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டு, கோவை வடக்கு மாநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை வடக்கு மாநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் மதிவாணன், கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையராகவும், கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்த அசோக் குமார், சென்னை சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
நாகப்பட்டினம் கடலோர காவல் பிரிவு எஸ்.பி., செல்வக்குமார், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி.யாகவும், கமாண்டோ படை எஸ்.பி.யாக இருந்த ராமர் ஐபிஎஸ், நாகப்பட்டினம் கடலோர காவல் பிரிவு எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டம் – ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 1996ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஐபிஎஸ், கேரள மாவட்டம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சேலம் மாநகர காவல் ஆணையர், மேற்கு, வடக்கு மண்டல ஐ.ஜி., என பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்.
சிபிசிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டபோது, சிபிசிஐடி இயக்குநர் பதவி டிஜிபி அந்தஸ்தில் இருப்பவரே நியமிக்க முடியும் என்றாலும், அபய் குமார் சிங்கிற்காக ஏடிஜிபி அந்தஸ்துக்கு அந்த பதவி பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சமயம் தமிழில் ‘அதிகாரிகள் மாற்றம்: சீட்டை கலைத்து போடும் ஸ்டாலின் – பின்னணி என்ன?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், மகேஷ் குமார் அகர்வாலை பின்னுக்கு தள்ளி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவியை சங்கர் ஐபிஎஸ் கைப்பற்றியுள்ளார்.
தமிழக காவல்துறை உயர்பதவிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவிக்கு வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவர் பரீசீலிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில், மகேஷ் குமார் அகர்வால், சங்கர், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரது பெயர்கள் பரீசீலிக்கப்பட்டு, நீண்ட ஆலோசனைக்கு பிறகு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் இபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்கின்றன காவல்துறை உயர் வட்டாரங்கள்.