புதுடில்லி :காலாவதியான வாகனங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற வழக்கில், தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.,வின் 22 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இதுகுறித்து, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், ‘பி.எஸ்., 4’ இன்ஜின்களுடன், 2017க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்க, உச்ச நீதிமன்றம் 2017ல் தடை விதித்தது. இந்த வகை வாகனங்கள் காலாவதியானவை எனவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆந்திராவின் தாதிபத்ரி தொகுதியில், தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வாக இருந்த பிரபாகர் ரெட்டி, ‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்தில் இருந்து தடை செய்யப்பட்ட இந்த வகை வாகனங்களை வாங்கினார்.
இவற்றை தன் நிறுவனம் வாயிலாக, 2017க்குப் பின் தயாரிக்கப்பட்ட வாகனம் என சான்றிதழ் தயாரித்து நாகாலாந்து, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விற்றார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, பிரபாகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் 22 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த வழக்கில், சென்னையை தலைமையிடமாக வைத்து செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அசோக் லேலண்ட் நிறுவன செய்தித் தொடர்பாளர், ‘நீதிமன்றம் தடை செய்த வாகனங்களை உடைத்து கழிவுகளாக்கத்தான் விற்றோம். இந்த வழக்கில் முழு விசாரணைக்கு தயாராக உள்ளோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement