சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர், அவர் பேசியதாவது:
ஜானகி எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளை நன்கு அறிந்தவர் ஜானகி அம்மையார்.
தற்போது, ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்கவிழா நடத்துவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நான் மாணவராக இருந்தபோது பள்ளியில் நிதி பெறுவதற்காக எம்.ஜி.ஆரை சந்திக்க சத்யா ஸ்டுடியோவுக்கு வந்தேன். அதன் மூலம் எம்.ஜி.ஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போது எம்ஜிஆர் நன்றாக படிக்க வேண்டும் என்று என்னிடம் உரிமையுடன் கூறினார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் நடித்த படம் வெளியாகும் போது முதல் நபராக நான் படத்திற்கு செல்வேன். அதன் பின்னர் எம்.ஜி.ஆரும் என்னை தொலைபேசியில் அழைத்து திரைப்படம் எப்படி இருந்தது என்று கேட்பார்.
எம்.ஜி.ஆர் நடித்த மருதநாட்டு இளவரசி படத்தில் மூன்று முதலமைச்சர்களின் பங்களிப்பு இருந்தது. என்னதான் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார். எம்ஜிஆரின் பங்களிப்பு திமுகவில் தான் அதிகம். எம்ஜிஆர் திமுகவில் அதிக காலம் இருந்தவர். தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி.
எம்ஜிஆர் ஜானகி என்ற கல்லூரிக்கு அனுமதி வழங்கியதும், அந்த கல்லூரி உருவாகுவதற்கு துணையாக இருந்தவரும் கருணாநிதி தான். மேலும், செவிக்குறைபாடு, பேச்சுக்குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்; நிச்சயமாக இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.