லண்டன், ”உக்ரைன் நாட்டு பெண்களை பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்வதை ரஷ்ய படையினர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்,” என உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா செலன்ஸ்கா, 44, குற்றஞ்சாட்டி உள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், கடந்த பிப்., துவங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. இதில், ரஷ்யா பல்வேறு விதமான போர் உத்திகளை கையில் எடுத்தாலும், உக்ரைனை கைப்பற்றுவதில் அது பின்னடைவையே சந்தித்து வருகிறது.
இந்நிலையில், போர்களின் போது ஏற்படும் பாலியல் வன்முறையை சமாளிப்பது குறித்து ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த சர்வதேச மாநாட்டில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியின் மனைவி ஒலேனா செலன்ஸ்கா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
உக்ரைன் மீதான போரில், ரஷ்ய படையினர் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். ஒருவர் மீதான ஆதிக்கத்தை நிரூபிக்க, மிகவும் கொடூரமான, மிருகத்தனமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த கொடுமைகளை, போர் நடக்கும் நேரத்தில் உலகின் கவனத்துக்கு எடுத்து வருவது எளிதல்ல.
இந்த பாலியல் வன்கொடுமைகளை ரஷ்ய படையினர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இது குறித்து, தங்கள் உறவினர்களுடனும், மனைவிகளுடனும் வெளிப்படையாக உரையாடுகின்றனர். இதன் வாயிலாகவே இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தெரியவந்தது.
இதை, ரஷ்ய வீரர்களின் மனைவிகளும் ஆதரிக்கின்றனர். ‘உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்துவிட்டு வா’ என, வெளிப்படையாகவே அவர்கள் தங்கள் கணவர்களுக்கு உத்தரவிடுகின்றனர். இதை ஒரு போர்க் குற்றமாக அங்கீகரிப்பதும், குற்றவாளிகள் அனைவரையும் பொறுப்பேற்க வைப்பதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement