மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் உடல் நல்லடக்கம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி..!

புதுச்சேரி: புதுச்சேரி வனத்துறை அலுவலகம் அருகே யானை லட்சுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1996ம் ஆண்டு 5 வயதில் லட்சுமி யானை வந்தது. உள்ளூர் பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை.

தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ெகாரோனா காலத்தில் இந்த முகாம் நிறுத்தப்பட்டது. இம்முகாமில் ஆண்டுதோறும் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் பங்கேற்று திரும்பும். இந்தாண்டு கோயில் நிர்வாகம், வனத்துறை அறிவுறுத்தல்படி லட்சுமிக்கு அது தங்கியுள்ள வேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுக்க அனுமதித்தது.

நீரிழிவு நோயால் காலில் புண்ணும் லட்சுமிக்கு ஏற்படும். ‌ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்கள் பார்க்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் யானையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழவகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. தமிழக வனத்துறை மருத்துவர்கள் பரிசோதித்த பின், யானை லட்சுமி கோயிலுக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமும் இருவேளையும் வாக்கிங் அழைத்து செல்லப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று காலை நடைபயணம் சென்றது. கல்வே கல்லூரி அருகே சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தது. பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறினர். இச்சம்பவம் புதுச்சேரி மக்களுக்கு மட்டுமல்லாமல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் ஆகியோரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. யானை லட்சுமி மறைவுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் தலைவர்கள், பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் யானை லட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து  இறப்புக்கான காரணம் குறித்து அறிவதற்காக கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின் யானை லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். யானை லட்சுமியின் இறுதிச் சடங்கில் பாகன் சக்திவேல் கதறி அழுதது பலரையும் உருக்கியுள்ளது. இறுதிச்சடங்கிற்கு பிறகு யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்பு மஞ்சள், உப்பு தூவி நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.