அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற பல்வேறு பணிகள் தொடக்க விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் அரியலூரில் ரூ.60 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட ரூ.1.57 கோடியில் 3 திட்டப் பணிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.31.38 கோடியில் 54 திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், அரியலூரில் ரூ.30.26 கோடியில் முடிவுற்ற 51 பணிகளையும், பெரம்பலூரில் ரூ.221.80 கோடியில் முடிவுற்ற 23 பணிகளையும் தொடங்கிவைத்து, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27,070 பேருக்கு ரூ.52 கோடியிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9,621 பேருக்கு ரூ.26.02 கோடியிலும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது. கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைக்கும் பொக்கிஷங்கள் மிகுந்த சிறப்புடையவை. அவற்றைப் பாதுகாக்கும் வகையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், சாலைகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், சிமென்ட் காரிடர் திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழில் துறையில் முன்னிலை
அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதிக மக்கள் தொகை, பெரிய பரப்பு கொண்ட மாநிலங்கள் கூட, தொழில் வளர்ச்சியில் தமிழகத்தைக் காட்டிலும் பின்தங்கியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தொழில் வளர்ச்சியில் தேக்கம் நிலவினாலும், அதற்கு முன் முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு அமைத்த அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக ஈர்த்து வரும் முதலீடுகளாலும்தான் இந்த நிலையை எட்டியுள்ளளோம்.
2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்தும் இலக்கின் பரிமாணங்கள்தான் இவை. அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதியோ, மாவட்டமோ தமிழகத்தில் இருக்கக் கூடாது. அதை நோக்கித்தான் பயணித்து வருகிறோம்.
பொய் புகார்கள்
ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்தகால ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தபோது, கைகட்டி வேடிக்கைப் பார்த்து, இயலாமையை வெளிப்படுத்தி,10 ஆண்டுகளை நாசமாக்கியவர்கள், தற்போது திமுக ஆட்சி மீது பொய்ப் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குசீர்குலையவில்லை. ஆனால், சீர்குலைக்க சிலர் சதி செய்கிறார்கள். சீர்குலையவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். தமிழகம் அமைதியாக இருக்கிறதே என்று சிலருக்கு வயிறு எரிகிறது.
தனது பதவி நிலைக்குமா என்று பயந்தவர்கள் சிலர், மக்களைப் பார்த்து `ஆபத்து ஆபத்து’ என அலறுகிறார்கள். இந்த ஆட்சி மக்களுக்குப் பாதுகாப்பான ஆட்சிதான்.
திமுக ஆட்சியின் குறிக்கோள்
தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல், தற்போது மகா யோக்கியரைப் போல, உத்தமரைப் போல பேசுபவர்களுக்கு, விமர்சனம் செய்யத் தகுதி இல்லை. தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும், உயரத்தையும் அடைவதே திமுக ஆட்சியின் குறிக்கோள். இதை முன்னிறுத்தியே நான் பணியாற்றுகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் அம்மோனைட்ஸ் குறித்த கண்காட்சி, மாளிகைமேடு அகழாய்வுப் பொருட்கள் அடங்கிய கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆ.ராசா, எம்எல்ஏ-க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், எம்.பிரபாகரன், மாவட்ட ஆட்சியர்கள் அரியலூர் பெ.ரமண சரஸ்வதி,பெரம்பலூர் ப.வெங்கடப்பிரியா மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.